ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் அரசியல், சினிமா சாயம் இருக்கக் கூடாது என்பது இளைஞர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுக சார்பில் நேற்றைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை திராவிட முன்னேற்ற கழகம் அயராது குரல் கொடுக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.