மாட்டிறைச்சி விவகாரம் - இது திராவிட மாடலா இல்லை ஆரிய மாடலா?... சீமான் கேள்வி

மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை ஆரிய மாடலா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 1, 2022, 06:00 PM IST
  • சேலத்தில் மாட்டிறைச்சி கடை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
  • இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்
  • இது திராவிட மாடலா இல்லை ஆரிய மாடலா என சீமான் கேள்வி
மாட்டிறைச்சி விவகாரம் - இது திராவிட மாடலா இல்லை ஆரிய மாடலா?... சீமான் கேள்வி title=

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி வரப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கடையை, இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, திடீரென மூட உத்தரவிட்டிருக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடு வெட்கக்கேடானது. ஏற்கனவே, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிரியாணி உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது பேசுபொருளாகி எதிர்ப்புக்கு உள்ளான நிலையில், உணவுத்திருவிழாவையே மொத்தமாக ரத்துசெய்து மதவாத அமைப்புகளை நிறைவடையச்செய்த திமுக அரசு, இப்போது மாட்டிறைச்சி உணவுக்கடைக்கு அனுமதி மறுத்து மூடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

மேலும் படிக்க | Red Alert: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அதிகனமழைக்கு வாய்ப்பு

அப்பகுதியிலிருக்கும் கோயிலைக் காரணமாகக் காட்டி, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதெனக்கூறி, மாட்டிறைச்சி கடையை மூடியதை நியாயப்படுத்த முனையும் மாவட்ட நிர்வாகம், கோழி, ஆடு இறைச்சிகளைக் கொண்ட உணவுக்கடைகளுக்கு மட்டும் அப்பகுதியில் அனுமதி வழங்கியதேன்? மாட்டிறைச்சி உணவுக்கு மட்டும் எதற்கு இந்தத் தீண்டாமைக்கோட்பாடு?

 

கோயிலுக்கருகே மாட்டிறைச்சி உணவுக்கடை வைக்கக்கூடாதென யார் சொன்னது? ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே’ எனப்பாடி, ‘மாட்டிறைச்சி உண்டாலென்ன? அவர் கொண்டிருக்கிற அன்பினால் சிவபெருமானால் ஏற்கப்படுவார்’ என சைவ சமயக்குரவர் அப்பரே உரைக்கிறபோது இவர்களுக்கென்ன சிக்கல்? பட்டினப்பிரவேசமும், பசு மடமும்கூட ஏற்பாக இருக்கும் திமுக அரசுக்கு மாட்டிறைச்சி உணவு மட்டும் உவர்ப்பாக இருப்பதேன்? அங்கு மாட்டிறைச்சி உணவுக்கடை இருந்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனம் புண்படுமெனும் மழுப்பல் வாதம் எதற்கு? திருச்சி, திருவரங்கம் கோயிலுக்கு எதிரேயுள்ள ஐயா பெரியார் அவர்களது சிலையினால் பக்தர்களின் மனம் புண்படுகிறதெனக்கூறி, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படுமென மதவாத அமைப்புகள் எச்சரித்தால், அச்சுறுத்தலுக்குப் பயந்து ஐயா பெரியாரது சிலையையும் இதேபோல அகற்றிவிடுவார்களா? என்ன கேலிக்கூத்து இது? மாட்டிறைச்சி உணவின் பெயரால் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடல் அரசா? இல்லை! ஆரிய மாடல் அரசா? என்பதை தமிழக அரசு தெளிவுப்படுத்த முன்வர வேண்டும்.

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி நினைவு நாள் - அமைதி பேரணி நடத்தும் திமுக

ஆகவே, சேலத்தில் மூடப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கடையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டுமெனும், உணவுரிமையில் தலையிடும் பிற்போக்குத்தனத்தை இனியும் செய்யக்கூடாதெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News