TVK President Vijay Latest News Updates: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்தது அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விஜய், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்? விஜய்யால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை இங்கு காணலாம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியதில் இருந்தே செய்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. விஜய் செய்யும் ஒவ்வொரு செய்கையும் சர்ச்சையானது. அவரது கட்சி மாநாடுக்கு பிறகு அவரது அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
விஜய் மீது வந்த விமர்சனங்கள்
ஆனால் அடுத்தடுத்து மாநாட்டில் பேசிய தீப்பொறி பேச்சுகள் விஜய்யின் செயலில் தென்படவில்லை. மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்காதது, மாநாட்டுக்கு வந்து உயிரிழந்தவர்களை வீட்டில் சென்று பார்க்காதது என பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்த பல முக்கிய பிரச்சனைகளுக்கு வெறும் அறிக்கைகள் மூலம் மட்டுமே கண்டனங்களை தெரிவித்து வந்தார்.
மேலும் படிக்க | அண்ணனாக எப்போதும் துணை நிற்பேன்! விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களில் சிலரை வீட்டுக்கே அழைத்து நிவாரணம் வழங்கியதில் இருந்து, அரசியலில் பொர்க் பிரம் ஹோம் செய்யும் ஒரே தலைவர் விஜய் தான் என கேலி கிண்டலுக்கு ஆளானார். இப்படி அரசியலில் அவர் செயல்பாடுகள் சொதப்பி வருவதாக பேசப்பட்ட நிலையில், இன்று அவர் செய்த அதிரடி சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
களத்தில் குதித்த விஜய்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றன. உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், எஃப் ஐ ஆர் நகல் வெளியானது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
அதில் அன்புத் தங்கைகளே கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன் என எழுதியுள்ளார். தொடர்ந்து, ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே என திமுக அரசை குற்றம்சாட்டியுள்ள விஜய், அண்ணனாகவும், அரணாகவும் நான் நிற்கிறேன் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சொன்ன சொல் தவறும் விஜய்...? ஆளுநர் சந்திப்புக்கு பின்... அரசியல் களத்தில் சலசலப்பு
விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
இந்த கடிதம் மிகப்பெரிய அளவில் வைரலானது. ஆனால் இந்த முறையும் அறிக்கை மட்டுமே விஜய் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுவதற்குள், யாரும் எதிர்பார்க்காத வகையில், அதிரடியாக ஆளுநரை சென்று பார்த்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் கையை மட்டும் அசைத்துவிட்டு நகர்ந்துவிட்டார் விஜய். ஆனால் அவரின் இந்த அரசியல் நகர்வு மிகப்பெரிய அளவில் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இனி களத்திற்கு வருவேன் என்பது போல விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
தேர்தலுக்கு ஓராண்டுகள் இருக்கும் சூழலில், தற்போது சூடுபறக்கும் அரசியலை நோக்கி தனது நகர்வுகளை ஆரம்பித்துவிட்டார் விஜய். ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் இவர், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பதே மிகப்பெரிய பேச்சாக உள்ளது. அதிமுகவுடன் கைகோர்ப்பாரா அல்லது விசிகவை தன் வசம் இழுத்து தேர்தலை சந்திப்பாரா என்பதெல்லாம் இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். அரசியலில் கடைசி நிமிடங்களில் கூட கூட்டணிகள் மாறலாம், உடையலாம் என்பதால் துப்பாக்கி படத்தில் விஜய் சொல்வது போல சஸ்பென்ஸ் உடனே காத்திருக்க வேண்டியது தான்.
மேலும் படிக்க | தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!! காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ