'சூரியவம்சம்' பாணியில்... அரசு பஸ்ஸில் போனா பைக், டிவி, பிரிட்ஜ் பரிசு... ஆனா ஒரு கண்டிஷன்!

TNSTC Online Bus Booking: ஆன்மூலம் மூலம் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பைக், டிவி, பிரிட்ஜ் ஆகியவை சிறப்பு பரிசுகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 12, 2024, 07:50 PM IST
  • ஆன்லைன் புக்கிங்கை ஊக்குவிக்க இந்த நடைமுறை
  • வழக்கமாக மாதாந்திர குலுக்கல் முறை நடைமுறையில் உள்ளது.
  • வழக்கமான குலுக்கல் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
'சூரியவம்சம்' பாணியில்... அரசு பஸ்ஸில் போனா பைக், டிவி, பிரிட்ஜ் பரிசு... ஆனா ஒரு கண்டிஷன்! title=

Special Prizes For TNSTC Online Bus Booking: பண்டிகை நாள்களில் நகரங்களில் பணியாற்றும் மக்கள் தங்களின் சொந்த ஊர் திரும்புவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அதிகமானோர் தென்மாவட்டங்களை நோக்கி பண்டிகை நாள்களில் பயணிப்பார்கள். இதனால், ரயில்வே துறையும் சரி, பேருந்து போக்குவரத்து துறையும் சரியும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படும். 

கூட்டத்தை சமாளிக்கவும், மக்கள் சிரமமின்றி செல்லவும் பொது போக்குவரத்துகள் சக்கரம் போல் சுழலும் எனலாம். அதிலும் ரயில்வே ஒருபக்கம் என்றால், தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பேருந்துகளும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு பேருந்துகளின் சேவை இன்றியமையாத ஒன்றாகும். அரசு பேருந்துகளிலும் தனியாரில் வழங்கப்படுவது போன்று AC, Non AC, Sleeper, Semi-Sleeper போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. அதுவும் தனியாரை விட குறைந்த விலையிலேயே இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

அரசின் முன்னெடுப்பு

சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது கூட மக்களுக்கு சிறப்பான சேவையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியது எனலாம். அக். 31ஆம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக திங்கட்கிழமை முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், தீபாவளி விடுமுறை முடிந்த பின் அதாவது வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது வழக்கம் தானே என நீங்கள் கேட்பது புரிகிறது.

மேலும் படிக்க | நிலம் வைத்திருப்பவரா? பட்டா மாற்றம் குறித்து தமிழக அரசு முக்கிய அப்டேட்

ஆனால், வழக்கத்தை விட மாறாக அரசு போக்குவரத்து கழகம் இந்த முறை புதிய அணுகுமுறை ஒன்றை கையில் எடுத்தது. அரசு தனியார் பேருந்துகளை குறிப்பிட்ட பண்டிகை காலங்களில் மட்டும் வாடகைக்கு எடுத்து, அரசு நிர்ணயித்த விலையிலேயே அவற்றை இயக்கின. இதனால் மக்களுக்கு கூடுதல் நன்மை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இது அடுத்த பொங்கல் பண்டிகைக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. தனியார் பேருந்துகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்தாலும், அதைவிட அதிகமாகவே அவை வசூலிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

பயணிகளை ஊக்குவிக்க...

அந்த வகையில், பொதுமக்கள் தனியார் சேவையை விட அரசின் சேவையை நோக்கி நகர்த்த பல்வேறு முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி மூலம் பேருந்துகளை முன்பதிவு செய்தால் குழுக்கல் முறையில் மக்களுக்கு சிறப்பு பரிசு வழங்கும் கொண்டுவரப்பட்டது. இதில் ஒவ்வொரு மாதமும், மாதாந்திர குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு குலுக்கல் முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறையில் என்னென்ன பரிசுகள் கிடைக்கும், சிறப்பு குலுக்கல் முறையில் என்னென்ன பரிசுகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

மாதாந்திர குலுக்கல் முறை

தற்போது, வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும், மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த மாதாந்திர குலுக்கல் முறையில், வார இறுதி நாள்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணச்சீட்டுக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. 

சிறப்பு குலுக்கல் முறை

பேருந்து டிக்கெட்டை ஆன்லைனில், அதாவது இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வண்ணம்,
முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 நவம்பர் 21ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20ஆம் தேதி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். 

இதில் முதல் பரிசாக இரு சக்கர் வாகனம், இரண்டாவது பரிசாக எல்இடி ஸ்மார்ட் டிவி மற்றும் மூன்றாவது பரிசாக குளிர்சாதனப்பெட்டி ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு குலுக்கல் முறை 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து உயர் பரிசுகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் உடனே TNSTC இணையதளம் அல்லது செயலி மூலம் புக்கிங் செய்து அரசு போக்குவரத்து கழகம் வழங்கும் பரிசை பெறும் வாய்ப்பை பெறுங்கள்.

மேலும் படிக்க | மக்களே நம்ம பக்கம்! வயிறு எரியவர்கள் எரியட்டும்.. நாம் சரித்திரம் படைப்போம் “உங்களில் ஒருவன் மு.க. ஸ்டாலின்”

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News