காவிரி: கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது!

Last Updated : Sep 14, 2016, 12:58 PM IST
காவிரி: கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது! title=

காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதால் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் பிறகு கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மாதம் செப். 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. பெங்களூர், மைசூர், மாண்டியா மாவட்டங்களில் தமிழர்கள் மற்றும் தமிழர்களின் உடமைகளை தாக்கினார்கள். தமிழர்களின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பெங்களூரு நகரம் பற்றி எரிந்தது. பெங்களூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பெங்களூரு நகரம் போர்க்களமாக காட்சியளித்தது.

வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் தப்பி ஓடும்போது கீழே விழுந்து பலியானார்.

மத்திய அரசு பெங்களூருக்கு 20 கம்பெனி துணை நிலை ராணுவத்தை அனுப்பியது. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டன. சில இடங்களில் மட்டும் கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

பெங்களூரில் 16 போலீஸ் நிலையப் பகுதிகளில் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை முடிவதாக இருந்தது. அந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் மெகரிக் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை பெங்களூரு நகரம் வழக்கம்போல இயங்கி வருகிறது. அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்துக்காக கர்நாடக பேருந்துகள் இயக்கப்படவில்லை. பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Trending News