தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (19.2.2020) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
மேலும், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 399 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4,748 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்கள்.
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நோக்கிலும், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்திடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல்வேறு குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சேலம், கோட்ட கவுண்டம்பட்டி திட்டப் பகுதியில் 18 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையம் - சத்யா நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நில வங்கி திட்டம் பகுதி-ஐஐஐ திட்டப் பகுதியில் 76 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடி குடியிருப்புகள்; கரூர் மாவட்டம், கரூர், சணப்பிரட்டி திட்டப் பகுதியில் 16 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், கோவை புதூர் திட்டப் பகுதியில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 672 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் - அளுக்குளி திட்டப் பகுதியில் 24 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருப்பூர் மாவட்டம், திருப்பூர், பாரதி நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருப்பூர், ஜெயா நகர் திட்டப் பகுதியில் 20 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, புரசைவாக்கம், கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-ஐ திட்டப் பகுதியில் 71 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 864 அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, எர்ணாவூர், இந்திரா காந்தி குப்பம் திட்டப் பகுதியில் 10 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, காலடிப்பேட்டை, டோபிகானா பகுதி-ஐ திட்டப் பகுதியில் 10 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, மணலி புதுநகர் பகுதி-ஐ திட்டப் பகுதியில் 31 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நில வங்கி திட்டம் பகுதி-ஐ திட்டப் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோவில்பட்டி நில வங்கி திட்டம் பகுதி-ஐஐ திட்டப் பகுதியில் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள்; சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 3 அடித்தளங்கள், தூண் தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் 1,88,237 சதுர அடி கட்டட பரப்பளவில், குளிர்சாதன வசதி, தீயணைப்புக் கருவிகள், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய மின்விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், 1500 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகளின் பயன்பாட்டிற்காக 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டடம்; தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பருத்திப்பட்டு கிராமத்தில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்ம திருமண மண்டபம்; என மொத்தம் 573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலகக் கட்டடம், அம்மா திருமண மண்டபம், ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சண்முகம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. பி. முருகேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.