நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நடிகர் ராதாரவி அதிமுகவில் மீண்டும் இணைந்தார்!!
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்த நடிகர் ராதாரவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர்காலம்' பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திரை பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்களை இழிவாக பேசும் ராதாரவி மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா கடிதம் எழுதினார். அதன்படி, ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்த நடிகர் ராதாரவி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (12.6.2019) திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராதாரவி அவர்கள் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். #AIADMK pic.twitter.com/hnXCE2FPRV
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2019