நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வேளையில், மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளதாக மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!!

Last Updated : Jul 13, 2019, 08:57 AM IST
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்! title=

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வேளையில், மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளதாக மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!!

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை எட்டிவிட முடியும் என இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஆய்வு மையம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மத்தியில் பரவி வரும் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

நியூட்ரினோ துகள் எளிதில் அடையாளம் காணமுடியாத அணுவை விட சிறிய துகள். உலகம் முழுவதும் பரவியுள்ள நியூட்ரினோ துகள்கள் குறித்த விவரங்களை அறிவது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. காஸ்மிக் கதிருடன் பயணிக்கும் நியூட்ரினோ துகள்களை பிரித்து ஆராய்ச்சி செய்ய கடினமான ஒற்றைப் பாறை தேவை. 

தேனி மாவட்டம் அம்பரப்பர் கல்பாறைதான், விஞ்ஞானிகள் எதிர்பார்த்த அந்த பாறை. இந்த பாறையினை சுமார் 1,500 மீட்டர் குடைந்து, அதில் மிகப்பெரிய மின்காந்தத்தைப் பொருத்தி அதன் மூலம் நியூட்ரினோ துகள்களை ஈர்த்து ஆய்வுகள் செய்யப்படவுள்ளன. 1,300 கோடி ரூபாய் மதிப்பில் செயல் படுத்தவுள்ள இந்த ஆய்வுக் கூடத்தின் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின. 

மலையைச் சுற்றி சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்தன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன் பின் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் மத்திய சுற்றுச்சூழல் மையத்தில் அனுமதி கோரப்பட்டது. நியூட்ரினோ மையம் அமைக்க அனுமதி வழங்கி மத்திய சுற்றுச்சூழல் மையம் அனுமதி அளித்தது.

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அணுசக்தித்துறை அனுமதி வழங்கியுள்ளது, தமிழக மக்களுக்கும் குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்டம் பொட்டி புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தேனித் தொகுதியிலிருந்து துணை முதலமைச்சராகியுள்ள ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இத்திட்டத்தை கைவிடச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Trending News