கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக கஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிர் சேதத்திற்கு ₹350 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள், உடமைகள் உள்ளிட்ட சேதங்களுக்கு நிவாரண நிதியாக ₹205.87 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சேதமடைந்த வீடுகளுக்கு ₹100 கோடியும், நெடுஞ்சாலைத்துறை நகர பஞ்சாயத்து , கிராமபுற மேம்பாட்டுத்துறைக்கு ₹ 55 கோடியும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணி குடிநீர் வழங்கும் துறைக்களுக்கு ₹15 கோடியும், உட்கட்டமைப்புக்கு மொத்தமாக ₹102.5 கோடியும், மீன்வளத்துறைக்கு ₹43.63 கோடியும், மின்சாரத்துறைக்கு ₹200 கோடியும் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.