தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக இன்று சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை (Haevy Rain) பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் (Rain) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | Weather Forecast: தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம்
நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி) 10 செ.மீ., திருச்சி டவுன் 7 செ.மீ., வீரகனூர் (சேலம்), நீலகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, குழித்துறை (கன்னியாகுமரி), பெரம்பலூர், கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 5 செ.மீ., நத்தம் (திண்டுக்கல்) திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 4 செ.மீ., மௌலத்தூர் (வேலூர்) பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 3 செ.மீ., டேனிஷ்பேட்டை (சேலம்), ஆம்பூர் (திருப்பத்தூர்) புளிப்பாட்டி (மதுரை) தலா 2 செ.மீ., விராலிமலை (புதுக்கோட்டை) கூடலூர் (தேனி) எருமைப்பட்டி (நாமக்கல்) வலங்கைமான் (திருவாரூர்) 1 செ.மீ. பெய்யக்கூடும்.
மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் மே 22 அன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR