முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் வரையில், தனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் ஆதாரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு சசிகலாவிடம் கேட்டிருந்த ஆணையம், அதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தது.
ஆனால், ஜனவரி 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆணையத்தில் தமக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள் பற்றிய விவரங்களை தருமாறு சசிகலா தரப்பு கோரியிருந்தது. மீண்டும் ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் தமக்கு எதிராக குற்றம்சாட்டியவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு சசிகலா தரப்பு கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், சசிகலாவின் கோரிக்கையை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக இதுவரை சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு வசதியாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ளவும், இனிவரும் காலங்களில் சாட்சியம் அளிப்பவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணை செய்து கொள்ளவும் அனுமதி அளித்தது. மேலும், இந்த உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு நகல் மற்றும் சாட்சியங்களின் நகல் ஆகியவற்றை ஆணையம் உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு அனுப்பி வைத்தது. இவற்றை சசிகலா 1-ந் தேதி பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோன்று சசிகலாவின் வக்கீலுக்கும் சாட்சியங்களின் நகல் மற்றும் ஆணையத்தின் உத்தரவு நகல் அளிக்கப்பட்டது.
ஆணையத்தின் இந்த உத்தரவு நகலை சசிகலா 1-ந் தேதி பெற்றுக்கொண்டுள்ளதால் அவர் தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணையம் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், சசிகலா தரப்பு இன்று பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், குறுக்குவிசாரணை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் போதாது என்றும், புகார் கொடுக்கும் அனைவரிடமும் ஆணையம் விசாரணை நடத்தி முடித்த பிறகு, இறுதியாக குறுக்கு விசாரணையை வைத்துக் கொள்வதாகவும் சசிகலா தரப்பு கூறியுள்ளது.
மேலும், தமக்கு எதிராக குற்றம்சாட்டியவர்களின் பெயர்ப்பட்டியல், வாக்குமூலங்களுடன் அவர்கள் அளித்த ஆவணங்களையும் தரவேண்டும் என சசிகலா தரப்பு மனுவில் கோரியுள்ளது. அதன் பிறகு 10 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாகவும் சசிகலா தரப்பு பதில் மனுவில் கூறியுள்ளது. இது மேலும் காலம் தாழ்த்துவதற்கான முயற்சி என விசாரணை ஆணையம் கருதுவதாக கூறப்படுகிறது.