TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து மூன்றாண்டுகள் கடந்த மே மாதத்தில் நிறைவடைந்தது. நான்காவது ஆண்டில் காலடி வைத்ததற்கு பின்னர், மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் மற்றும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என்பது சில கடுமையான விமர்சனங்களையும் பெற்று தந்தன எனலாம்.
இரண்டு விவகாரங்களும் திமுக அரசின் மீது படிந்த பெரும் கறைகள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், பள்ளிகளின் காலை உணவுத் திட்டம், மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு சமூக நலத் திட்டங்கள் நங்கூரமாக நற்பெயரையும் பெற்று தந்துள்ளதையும் மறுக்க முடியாது.
அமைச்சர்கள் குறித்த ரிபோர்ட்...
இது ஒருபுறம் இருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னர் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னர் பல்வேறு காரணங்களுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த முறை, அமைச்சர்களின் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அமைச்சர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து உளவுத்துறை முதல்வருக்கு ரிபார்ட் ஒன்றை சமர்பித்திருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணை முதல்வராகிறாரா உதயநிதி...?
இந்நிலையில், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவருக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும், அதிலும் உள்ளாட்சித் துறையை ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயண தேதிகள் இன்னும் உறுதியாகாத நிலையில், நிச்சயம் அதற்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஆர்-க்கு முக்கிய இலக்கா...?
நிதி மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என்பது உறுதியானாலும் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை போன்ற முக்கிய இலாக்காக்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சராக இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் அமைச்சரவையில் ஒரு முக்கிய இலாக்காவை ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி போல் ஸ்டாலின்...
எனினும் இந்த தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை என்றாலும், அமைச்சரவை குறித்த முடிவுகள் அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலினிடமே இருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாத இறுதியிலோ அல்லது சுதந்திர தினத்திற்கு பின்னரோ முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னரே மு.க.ஸ்டாலின், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். எனவே, தற்போது மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதியும் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனலாம். 2021ஆம் ஆண்டில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான உதயநிதி ஸ்டாலின் 2022ஆம் ஆண்டில் அமைச்சரவையில் இடம்பெற்றது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ