கலைத்துறையில் சாதனை படைத்த அலர்மேல்வள்ளி, எஸ்.வி.சேகர், அரவிந்தாக்ஷன், ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோருக்கு சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கலைத்துறையில் சாதனைபடைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ப்ரவோக் கலைத்திருவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சமத்துவம் எனும் தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தி பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார். நாட்டியக் கலைஞரான பத்மஸ்ரீ லீலா சாம்சன் அகத்தீ எனும் தலைப்பில் நடன விருந்து படைத்தார். மேலும் ஓ.எஸ் அருணனின் ஸ்பந்தமாத்ரிகா நடனநிகழ்ச்சி, முத்துசாமி தீட்சிதர் உருவாக்கிய குமுதக்ரியாவில் அர்த்தநாரீ எனும் சிவ பார்வதி நடனம், ரேவதி, மதுவந்தி மற்றும் கல்யாண வசந்தம் ஆகிய ராகங்களில் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் மேஸ்ட்ரோ லால்குடி ஜி.ஜெயராமன் இசையமைத்த தில்லானா இசைக்கச்சேரி ஆகியவை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, கலை வடிவங்களுக்காக உலக அரங்கில் தனக்கென தனி முத்திரை படைத்த பத்ம பூஷன் அலர்மேல் வள்ளி, கலைமாமணி எஸ் வி சேகர், கணபூஷணம் வி ஏ அரவிந்தாக்ஷன் மற்றும் டி ராதாகிருஷ்ண ஸ்தபதி ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தொழிலதிபரும் டோனி அண்டு கை அழகுநிலைய நிறுவனருமான சாம்பால் மற்றும் அஸ்வினி சாம்பால் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர் . விருது பெற்றபின் உரையாற்றிய எஸ். வி. சேகர், கலைத்துறையில் இயங்கிகொண்டு இருக்கும்போதே விருது பெறுவது வரம் என்றும், இயங்கி முடித்த பின் வழங்கினால் அது ஓய்வூதியம் என்றும் குறிப்பிட்டார். தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு வேறுபாடுகள் நிறைந்தது இந்தியா எனவும், அதனை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறிய அன்புமணி இராமதாஸ், இந்த நிகழ்ச்சியில் தகுதி உடையவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றார். நவீனத்துவம், முதலாளித்துவம் உள்ளிட்டவற்றை பின்பற்றும் இளைய தலைமுறையினர் நமது கலை, பண்பாடு உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூசுந்தர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது சாதாரண விஷயமல்ல என்றும் கூறினார். தலைசிறந்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ