பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 22 ஆயிரத்து 155 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் வழக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில், விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
மொத்தமாக 23 ஆயிரத்து 778 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அவை பரிசீலனை செய்யப்பட்டு தற்போது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தரவரிசை மதிப்பெண் விவரங்களை சுகாதாரத்துறை இணையதளத்தில் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.