தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் ஏதும் மூடப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக சென்னையில் சில பள்ளிகள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன்., தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தால் பள்ளிகள் ஏதும் மூடப்படவில்லை., பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது. 5 பாடங்கள் கொண்டு வருவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பின்னர் தான் முடிவு செய்யப்படும். பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அடுத்த 2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பாடப்புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.