தமிழகத்தின் (Tamil Nadu) தனிச்சிறந்த அடையாளங்களில் சித்த மருத்துவமும் (Siddha Medicine) ஒன்றாகும். பல அரிய மூலிகைகளை பலவித அளவுகளில் சேர்த்து தயாரிக்கப்படும் சித்த மருத்துவ சூரணங்களும் கஷாயங்களும் பல கொடிய நோய்களுக்கான தீர்வுகளை அளிக்கின்றன.
உலகை கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ள இந்த சூழலில், சித்த மருத்துவத்தின் தேவையும் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளன. கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னரே, பருவகால நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழகத்தில் சித்த மருத்துவ கஷாயமான கபசுர குடிநீர் (Kabasura Kudineer) பரவலாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இதன் அவசியம் அதிகரித்திருக்கின்றது.
இந்நிலையில், நாட்டின் தலைநகரான (National Capital) டெல்லியில் (Delhi), குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கபசுர குடிநீரின் புகழ் பரவி வருகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி மக்கள் அதிக அளவில் அறிந்து வருகிறார்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் (President Estate), குடியரசுத் தலைவர், அவரது குடும்பத்தினர், அங்கு பணி புரியும் அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமின்று அங்கிருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் இடையில் கபசுர குடிநீர் அறிமுகப்படுத்தப்பட்டு அளிக்கப்பட்டது. இதன் பெருமை, இந்த வளாகத்தில் உள்ள ‘ஆயுஷ் வெல்னஸ்’ கிளினிக்கில் உள்ள 10 பேர் கொண்ட சித்த மருத்துவ பிரிவைச் சேரும்.
இக்குழுவின் தலைவரான சித்த மருத்துவர் இளவரசன் அவர்கள், இங்கு தினமும் 4 முதல் 5 லிட்டர் கபசுர குடிநீர் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார். தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு, தில்லியின் பல்வேறு பகுதிகளிலும், மருத்துவர் இளவரசன் தலைமையில் கபசுர குடிநீர் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகின்றது.
இவர்களது குழு இதுவரை பல்வேறு இடங்களில் கேம்புகளை அமைத்து பொது மக்களுக்கு கபசுர குடிநீரை அளித்துள்ளது. தமிழர்கள் மட்டுமின்றி தில்லிவாசிகளுக்கு இடையிலும் இது பிரபலமாகி வருகிறது. பின்விளைவுகளற்ற இந்த அரிய சித்த மருந்துவ கஷாயத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு மக்கள் இதை அதிக அளவில் பயன்படுத்த முன்வருகின்றனர்.
ALSO READ: தினமும் கொஞ்சம் தேங்காய் போதும்… நெருங்கி வர அஞ்சி நோய் ஓடும்…. !!!!
தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு உள்ள புரிதல் போல மற்ற மாநிலங்களில் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும் இந்த நிலையை மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை தலைநகர் டில்லியிலும் அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன் கீழ், மத்திய சுகாதாரத் துறை (Ministry of Health), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கௌன்சில் (ICMR), ஆயுஷ் (AYUSH) ஆகியவை இணைந்து கபசுர குடிநீரை உள்ளடக்கிய சித்த மருத்துவ வழிமுறைகளை அறிவித்துள்ளன.
தமிழ்நாடு இல்ல ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், திகார் சிறை காவலர்கள், பத்திரிக்கையாளர்கள் டில்லியில் என பல தரப்பினருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
எந்த வித பக்க விளைவுகளும் இன்றி உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீரும், இது போன்ற பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சித்த மருத்துவமும் முறையாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட வேண்டும். கொரோனாவின்(Corona) ஒரு நேர்மறை விளைவாக இது நடந்தால், அதனால் வரவிருக்கும் சந்ததியினர் பயன் அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ALSO READ: Monsoon diet: மழைக்காலத்தில் கீரை மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டுமா?