இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, உண்மையிலேயே தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டின் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க நேரம் வந்துவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் முழுக்க, முழுக்க பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க வகை செய்யும் 2000&ஆவது ஆண்டின் சட்டத்தை ரத்து செய்து நேற்று முன்நாள் அளித்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை அந்தப் பிரிவுகளில் இடம் பெற்றுள்ள சில முன்னேறிய பிரிவினர் மட்டுமே அனுபவிக்கின்றனர் என்ற குமுறல் அதே பிரிவில் இடம்பெற்றுள்ள பிற சமுதாய மக்களிடம் காணப்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்காத வகையில், இடஒதுக்கீடு பெறும் சாதிகளின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியுள்ளது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் கடந்த காலங்களில் மிக அதிக சலுகைகளை அனுபவித்த சமுதாயங்களை நீக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து விவாதத்திற்குரியது. அதேநேரத்தில் இட ஒதுக்கீட்டில் அநீதி நிலவுகிறது; ஒரே இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள வளர்ச்சியடைந்த சமுதாயங்கள், அதேபிரிவில் உள்ள பின்தங்கிய சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைப்பதைத் தடுக்கின்றன என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகவும் சரியானது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த சிக்கலுக்கு சமூக நீதியின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்; அத்தகைய தீர்வு எவரையும் பாதிக்கக்கூடாது என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் மிகச்சரியானதாக இருக்கும்.
தேசிய அளவில் எடுத்துக் கொண்டாலும், மாநில அளவில் எடுத்துக் கொண்டாலும் இட ஒதுக்கீட்டில் சில பிரிவினருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்பது உண்மை. மத்திய அரசின்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் தான் இதற்கு ஆதாரம் ஆகும். ‘‘இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. அவற்றில் 25% இட ஒதுக்கீட்டை வெறும் 10 சாதிகள் மட்டுமே அனுபவித்து வருகின்றன.
1640 சாதிகளுக்கு வெறும் 3% மட்டுமே இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. மீதமுள்ள 983 சாதிகள் இதுவரை இட ஒதுக்கீட்டின் பயன்களையே அனுபவிக்கவில்லை’’ என்பது தான் ரோகிணி ஆணையம் தயாரித்துள்ள முதல் கலந்தாய்வு அறிக்கையின் முக்கிய அம்சமாகும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வளவு துரோகம் இழைக்கப்படுகிறது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 10 விழுக்காட்டைக் கூட தாண்டாத நிலையில், இந்த அளவுக்கு பாகுபாடுகள் நிலவுவது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.
சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள சாதிகளை முன்னேற்றுவதற்கான சிறந்த ஏற்பாடு இட ஒதுக்கீட்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், கல்வி மற்றும் சமூகப் படிநிலையில் ஒவ்வொரு சாதிக்குமான இடம், மக்கள்தொகை உள்ளிட்ட எந்தவிதமாக காரணிகளையும் கருத்தில் கொள்ளாமல், உத்தேசமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது தான் இப்போது நிலவும் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணமாகும். 1931&ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததாலும், அதன்பின் இந்திய நிலப்பரப்பும், மக்கள்தொகை பரவலும் ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டதாலும், இப்போதுள்ள சாதி புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு உண்மையான சமூகநீதியை பிரதிபலிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமில்லாதது.
அதனால் தான் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் சிறந்தவழி என்று தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 13.07.2010 அன்று அளித்தத் தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இப்போது அளித்துள்ள தீர்ப்பில் கூட இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையிலும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டும் புதிய இடஒதுக்கீட்டுப் பட்டியலை தயாரிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன் பொருள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டு பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் என்பது தான்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஓபிசி&சாதி என்ற புதிய பிரிவை மட்டும் சேர்த்தால் போதுமானது. இதை மத்திய, மாநில அரசுகளிடம் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இப்போதாவது, தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டும். அதற்கு வசதியாக, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள 2021&ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பையே, சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.