உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது!!
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூய்மை காவலர்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலை இன்றும் பெறவில்லை என்றும் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறமுடியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.