கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-னின் கீழ் நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அத்துடன் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி நெசவு தொழிலாளர்களுக்கான கூலி ஒரு சேலைக்கு 43 ரூபாய் ஆகவும், வேட்டிக்கு 24 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சிறுதொழில் மேம்பாடு துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் சென்னையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய கைலாஷ், சேலையூர், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ 1, 122 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படும். 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப் பாலம் ஆகியன அமைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.