எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பது அதிமுக அமைச்சரவை அல்ல, சுற்றுலா அமைச்சரவை என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உலக முதலீட்டாளர் மாநாடுகளில் அறிவித்த ரூ.5.42 லட்சம் கோடி முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல் பொழுதுபோக்காக சுற்றுலா சென்றுள்ளனர் எனவும் மாநில அரசை சாடியுள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் பூலித்தேவனின் 304-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி – நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், "பூலித்தேவனின் மணிமண்டபத்தில் உள்ள அவரது வாழ்க்கை குறிப்பேட்டை பார்த்தேன். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் அவர்.
பூலித்தேவனின்விடுதலைப் போராட்ட உணர்வையும் தேசப்பற்றையும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலப் பாதையாக அமைத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்., நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் போட்டி என்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "வங்கி ஊழியர்கள், அரசின் பொதுத்துறை வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக வெறுப்பு காட்டி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மட்டுமல்ல. 10 அமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். ஏற்கனவே நடந்த 2 உலக தொழில் முனைவோர் மாநாட்டின் நிலை என்ன? அதன் மூலம் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உலக முதலீட்டாளர் மாநாடுகளில் அறிவித்த ரூ.5.42 லட்சம் கோடி முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல் பொழுதுபோக்காக சுற்றுலா சென்றுள்ள அமைச்சரவை ஒரு சுற்றுலா அமைச்சரவை என விமர்சித்தார்.