காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியில் போராட்டம் நடைபெற்றபோது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற விவசாயிகள் அனைவரும் அகில இந்திய அளவில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அய்யாக்கண்ணு மற்றும் வட இந்திய விவசாயிகள் முடிவு செய்தனர்.
அதன்படி டெல்லியில் அவர்கள் ஆலோசனை நடத்தி, ‘அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு’ என்ற அமைப்பை உருவாக்கினர். தென் மண்டல தலைவராக அய்யாக்கண்ணு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து 10 பேர் கொண்ட செயற்குழு அமைத்து இருக்கிறோம். வரும் ஜூலை 6-ம் தேதி விவசாயிகளின் ஊர்வலம் தொடங்குகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நாடு முழுவதும் செல்லும்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் ஜூலை முதல் வாரம் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.