டெல்லி தனிக்கோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்து இருக்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருகிற 29-ம் தேதி வரை காவல் நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தினகரன் சார்பில் ஜாமீன் கோரி தனிக்கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
மனுவில் கூறப்பட்டது:-
டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கு தொடர்பான சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரனுக்கு எந்தவகையிலும் தொடர்பு கிடையாது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான அத்தனை விளக்கங்களையும் அவர் டெல்லி போலீசுக்கு அளித்து இருக்கிறார். சிறையில் அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தினகரனை நீதிமன்ற காவலில் இருந்து விடுவித்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளது.