டாக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஐ.எஸ். வெளியிட்டு உள்ள வீடியோவில், வங்காளதேசத்தில் இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி தொடங்கும் வரையில் இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் 1-ம் தேதி இரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதிரடிப்படையினர் வந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.
ஆனால் இதை வங்காளதேச அரசு ஏற்கவில்லை. வங்காளதேசத்தில் ஐ.எஸ். இயக்கத்தினரோ அல்லது அல்கொய்தா அமைப்பினரோ இல்லை, இந்த தாக்குதல் நடத்தியது உள்ளூர் பயங்கரவாதிகளே என்று கூறியது. இதற்கிடையே இவ்வாண்டு தொடக்கத்தில் மாயமான மாணவர்களே பயங்கரவாதிகளாக வந்து தாக்குதல் நடத்தினர் என்ற செய்தியும் வெளியாகியது.
இந்நிலையில் ஐ.எஸ். வெளியிட்டு உள்ள வீடியோவில், வங்காளதேசத்தில் இஸ்லாமிய சட்டத்தின் படி ஆட்சி தொடங்கும் வரையில் இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. ”வங்காளதேசத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்... நாங்கள் வெற்றிபெறும் வரையிலும், ஷரியா சட்டம் உலகம் முழுவதும் அமல்படுத்தும் வரையிலும் இதுதொடரும், தொடரும், தொடரும்...” என்று வங்காளதேச பயங்கரவாதி வீடியோவில் கூறி உள்ளான். பயங்கரவாதி பெங்காலி மற்றும் ஆங்கில மொழியில் பேசுகின்றான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.