டோக்கியோ: ஜப்பானில் பேரழிவு தரும் "ஹகிபிஸ்" புயல் காரணமாக பெய்து வரும் மழை மற்றும் சூறாவளி காற்று பெரும்பாலான பகுதிகளில் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மிக அழிவுகரமான புயல் இது என்று நம்பப்படுகிறது. பிபிசி அறிக்கையின்படி, ஹசிபிஸ் சூறாவளி டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில் சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு கரையை கடந்தது.
"ஹகிபிஸ்" புயல் ஜப்பானின் பிரதான தீவின் கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் நகர்கிறது. என்.எச்.கே அறிக்கையின்படி, 2,70,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தகவல்களின்படி, புயல் காரணமாக இரண்டு பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஒருவர் டோக்கியோவுக்கு (Tokyo) கிழக்கே உள்ள ஷிபா மாகாணத்தில் வசிப்பவர். பலத்த காற்றால் தனது வாகனம் கவிழ்ந்ததால் மரணம் அடைந்தார். மற்றவர் தனது காருடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கிடைத்த தகவல்களின்படி, 90 பேர் காயமடைந்துள்ளதாக என்.எச்.கே தெரிவித்துள்ளது.
ஆபத்தான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், ஜப்பான் நிர்வாகம் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கோரியுள்ளது. ஆனால் 50,000 பேர் மட்டுமே பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜே.எம்.ஏ வானிலை ஆய்வு அதிகாரி யசுஷி காஜிவாரா ஊடகத்திடம் பேசுகையில், நகரங்கள் மற்றும் கிராமங்களில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைவருக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன எனக்கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்கனவே வந்துவிட்டன. இப்போது உயிரைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.