பாலியல் சுற்றுலா: தேவைக்கு திருமணம், உடனே விவாகரத்து... வறுமையால் வலையில் சிக்கும் பெண்கள் - பின்னணி இதோ

Pleasure Marriages: சுற்றுலாவுக்கு வரும் ஆண்கள் இந்தோனேஷியாவில் உள்ளூர் பெண்களை குறுகிய காலத் தேவைக்காக திருமணம் செய்துகொள்ளும் முறை தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 5, 2024, 07:28 PM IST
  • இதனால் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
  • பாலியல் தேவைக்காக பெண்கள் சுரண்டப்படும் அபாயம்
  • இது அங்கு பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது.
பாலியல் சுற்றுலா: தேவைக்கு திருமணம், உடனே விவாகரத்து... வறுமையால் வலையில் சிக்கும் பெண்கள் - பின்னணி இதோ title=

Indonesia Pleasure Marriages: இந்தோனேஷியன் கிராமம் ஒன்றில் நடக்கும் வினோத பழக்கம் ஒன்று தற்போது இணையத்தையே அலறவைத்துள்ளது. இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா வரும் ஆண் பயணிகள் அங்குள்ள உள்ளூர் பெண்களுடன் குறுகிய கால திருமண உறவை வைத்துக்கொள்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பெரும்பாலும் மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் ஆண் பயணிகள் அங்குள்ள பெண்களின் தேவையை புரிந்து, அதற்கேற்ப பணம் கொடுத்து இந்த குறுகிய கால திருமணங்களை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புன்காக், அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தளமாக உள்ளது. அதிலும் அரபு நாடுகளின் பயணிகள் இங்கு அதிகமாக வருகை தருகின்றனர். அங்கு வரும் சில ஆண் பயணிகள் சில ஏஜன்சிகளின் ஏற்பாடுகள் மூலம் உள்ளூர் பெண்களை திருமணம் செய்துகொள்கின்றனர் என கூறப்படுகிறது. முதன்முதலில், இந்த பழக்கம் குடும்பத்தினராலேயே பின்பற்றப்பட்டுள்ளது. அதாவது, பொருளாதார காரணங்களால் அவதிப்படும் குடும்பம் அதில் உள்ள இளம் பெண்களை இதுபோன்ற குறுகிய கால திருமண பந்தில் ஈடுபடுத்தி உள்ளது. இது நாளடைவில் புரோக்கர்கள்/ஏஜென்சிகளின் தலையீடுகள் மூலம் நடைபெறுகிறது எனவும் கூறப்படுகிறது. 

இன்பத்திற்கான திருமணங்கள் என்றால் என்ன?

 

உள்ளூர் பெண்கள் ஏஜென்சிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். சுற்றுலா வரும் ஆண் பயணிகள் இந்த ஏஜென்சியை அணுகுவார்கள். பயணி தரப்பும், உள்ளூர் பெண் தரப்பும் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் வரதட்சணை போன்று ஒரு தொகையை அந்த ஆண் பயணி பெண்ணிடம் கொடுத்த பின்னர் அவர்களுக்கு இடையே முறைசாரா திருமணம் நடைபெறும். இதற்கு அந்த பெண், அந்த ஆண் பயணி அங்கு தங்கியிருக்கும் வரை பாலியல் ரீதியில் துணையாகவும், வீட்டு வேலையையும் செய்துகொடுக்கும் பணியாளாகவும் இருக்க வேண்டும். இதனை ஏஜென்சிகள் தொடர்ந்து செய்துவந்ததை அடுத்து, இது தற்போது ஒரு 'வெற்றிகரமான' தொழிலாக அங்கு மாறிவிட்டது எனலாம்.

இந்த குறுகிய கால திருமணங்களை "இன்பத்திற்கான திருமணங்கள்" (Pleasure Marriages) என்றழைக்கப்படுகிறது. இது தற்போது பெரிய தொழிலாக உயர்ந்து சுற்றுலாவையும், அதுசார்ந்த உள்ளூர் பொருளாதாரத்தையும் பெருக்கி உள்ளது என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பற்றி எரிந்த பேருந்து... 25 மாணவர்கள் உயிரிழப்பு? பலி எண்ணிக்கை உயரும் அச்சம் - தாய்லாந்தில் பயங்கரம்

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?

இதுபோன்ற குறுகிய கால திருமணம் செய்துகொண்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமீபத்தில் தான் சந்தித்த கொடுமைகள் குறித்து LA Times ஊடகத்திடம் பேசி உள்ளார். இந்த பெண்ணின் பெயர் Cahaya என வைத்துக்கொள்வோம், அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அந்த பெண்மணி, மத்திய கிழக்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுடன் 15க்கும் மேற்பட்ட திருமணங்களை மேற்கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதாவது 15 நபர்களுடன் அவர் குறுகிய கால திருமணத்தை மேற்கொண்டதாகவும் கூறினார். அவரின் முதல் கணவர், சௌதி அரேபியா நாட்டைச் சேர்ந்த 50 வயது நபர் ஆவார். அவர் 850 அமெரிக்க டாலர் (ரூ. 71,412) பணம் கொடுத்து தன்னை திருமணம் செய்துகொண்டார் என அந்த பெண் கூறினார். ஏஜென்சிகளும், அதன் அதிகாரிகளும் பங்குகளை எடுத்துக்கொண்ட பின்னர் அதில் பாதிதான் தனக்கு கிடைத்ததாகவும் கூறினார். 

முதல் திருமணம் நடைபெற்ற ஐந்து நாள்களிலேயே அந்த நபர் நாடு திரும்பிவிட்டார் என்றும் அதை தொடர்ந்து அவருடன் விவாகரத்து நடந்தது என்றும் Cahaya கூறினார். மேலும், ஒரு திருமணத்திற்கு 300 அமெரிக்க டாலரில் இருந்து 500 அமெரிக்க டாலர் வரை பெறுவதாக கூறுகிறது. இது தனது வாடகைக்கும், தனது தாத்தா - பாட்டியை பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கிறது என்றும் கூறினார். Cahaya தற்போதும் இந்த குறுகிய கால திருமணங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. 

Nisha என்ற மற்றொரு பெண் (இவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இந்த குறுகிய கால திருமண முறையில் இருந்து வெளிவந்துவிட்டார். அவருக்கு இதுவரை 20 குறுகிய கால திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இந்தோனேஷியாவின் குடியேற்ற அதிகாரி ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டு மகன்களை பெற்றெடுத்து புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளார். மேலும், தனது பழைய வாழ்க்கைக்கு எந்த நிலையிலும் போகக்கூடாது என வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். 

கலாச்சாரமும் ஏற்கவில்லை... சட்டமும் ஏற்கவில்லை

இந்த குறுகிய கால திருமணம் என்பது நிக்காஹ் முத்தா என ஷியா இஸ்லாமிய கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த குறுகிய கால திருமணம் என்பது திருமணத்தின் அடிப்படை சாராம்சத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது என்பதால் இந்தோனேஷிய சட்டத்தாலும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  

இந்த குறுகிய கால திருமணம் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மீது நடத்தப்படக்கூடிய சுரண்டல் ஆகும். மேலும் இது பாலியல் ரீதியிலான சுற்றுலாவை ஊக்குவிக்கும் எனவும் பெண்களின் பாதுகாப்பின்மை பற்றிய தீவிர கவலைகளை எழுப்பும் விஷயமாகவும் உள்ளது. நெட்டிசன்கள் இந்த நடைமுறையை கடுமையாக சாடி வருகின்றனர். வறுமையில் வாடும் சமூக மக்களையும் பெண்களையும் பணத்தை கொடுத்து தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி அவர்களை சுரண்டி துஷ்பிரயோகம் செய்கிறது எனழும் இது மனித கடத்தலுக்கு வழிவகுக்கும் எனவும் வாதிடுகின்றனர். 

மேலும் படிக்க | தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேலை தாக்குவோம். ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News