அமெரிக்க அதிபர் தேர்தல்களின் முடிவுகளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல்கள் எப்போதுமே உலக மக்களால் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
அமெரிக்க அதிபர் (American President) டொனால்ட் டிரம்ப் வாக்களிப்பதை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாக அச்சுறுத்தியதை அடுத்து, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் (Joe Biden) சட்ட ஆலோசகர்கள், டிரம்ப் அப்படி ஏதாவது செய்தால், அதற்கு சரியான பதிலளிக்க தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளனர். பிடன் மோசடி பிரச்சாரத்தை குற்றம் சாட்டிய டிரம்ப், தான் ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், மேலும் வாக்குகளை எண்ணுவது “அமெரிக்க பொதுமக்கள் மீது மோசடி செய்வது போன்றது” என்றும் கூறினார்.
"சரியான முறையில் நாங்கள் வாக்குகளைப் பெறுவதைத் தடுக்க நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அச்சுறுத்தலை அதிபர் ஏற்படுத்தினால், அந்த முயற்சியை எதிர்ப்பதற்கு எங்கள் சட்டக் குழுக்கள் தயாராக உள்ளன” என்று பிடன் பிரச்சார மேலாளர் ஜென் ஓமல்லி தில்லன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார் என்று ராய்ட்டர்ஸால் கூறியது.
ALSO READ: US Elections: டிரம்ப்புக்கு வெற்றியா அல்லது ஜோ ஜெயிப்பாரா? பரபரப்பு தொடர்கிறது…..
முன்னதாக இரவில், பிடென் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதாக நம்பிக்கை உள்ளதாகக் கூறியதோடு, தனது ஆதரவாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். “உங்கள் பொறுமை பாராட்டத்தக்கது. இது நீண்ட நேரம் செல்லும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அது அடுத்த நாள் காலை அல்லது அதற்கு மேலும் போகும் என யாரும் நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்” என்று பிடென் டெலாவேரில் பேசினார்.
டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் பிடென் இருவரும் சிறிய மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றிகளை ஈட்டியுள்ளனர், இப்போது அனைவரது கவனமும் முக்கிய மாகாணங்கள் மீது உள்ளன. டிரம்ப் புளோரிடா, டெக்சாஸ், அயோவா மற்றும் ஓஹியோவில் வெல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிடென், அரிசோனாவில் வெல்ல வாய்ப்புள்ளது. வட கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
IST மதியம் 12 மணியளவில், டிரம்பின் 213 க்கு எதிராக பிடென் 224 தேர்தல் வாக்குகளைப் பெற்றதாக தி அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது. அதிபர் பதவியை வெல்ல ஒரு வேட்பாளருக்கு 270 தேர்தல் வாக்குகள் தேவை.
இதுவரை, டிரம்ப் அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சாஸ், இடாஹோ, கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹோமா, தெற்கு டகோட்டா, டென்னசி, மேற்கு வர்ஜீனியா, வயோமிங், இந்தியானா, தென் கரோலினா மற்றும் உட்டா ஆகிய மாகாணங்களில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடென், இதற்கிடையில், கலிபோர்னியா, கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் போன்ற ஜனநாயக சாய்ந்த மாநிலங்களில் முன்னணி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கைகள் முடிந்து விரைவிலேயே புதிய அதிபருக்கான அறிவிப்பு வர வேண்டும் என உலகமே காத்திருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது அமெரிக தலைவர்கள் அளித்து வரும் அறிவிப்புகள் சூழலை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வைத்துக் கொண்டிருக்கின்றது.