Budget 2025, Gold Price: வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் (Budget 2025) வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், பலரும் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், கடந்த ஜூலை மாதம் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். மக்களவை தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தனர்.
குறைக்கப்பட்ட தங்கத்தின் இறக்குமதி வரி
அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இருந்தாலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை (Custom Duty On Gold) குறைத்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6% சதவீதமாகவும்; பிளாட்டினம், பல்லேடியம், ஆஸ்மியம், ருத்தேனியம், இரிடியம் ஆகியவற்றின் மீதான சுங்க வரியை 15.4 சதவீதத்தில் இருந்து 6.4% ஆகவும் குறைத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தங்கத்தின் இறக்குமதி 331.5% உயர்வு
இதனால், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்தின் இறக்குமதி அபரிமிதமாக அதிகரித்தது. 2024ஆம் ஆண்டு நவம்பரில் தங்கத்தின் இறக்குமதி அசாதாரணமான வகையில் 331.5% உயர்ந்து அதன் இறக்குமதி மதிப்பு 14.86 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டின் இதே நவம்பர் மாதத்தில் இறக்குமதி மதிப்பு 3.44 பில்லியன் அமெரிக்க டாலராகவே இருந்தது.
ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவு
இறக்குமதி அதிகரித்தாலும் ரத்தினம் மற்றும் நகைகள் போன்ற முடிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி சுருங்கியதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. ரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதி 10.16% குறைந்து 19.23 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அரசின் லேட்டஸ்ட் மாதாந்திர வர்த்தக தரவுகளின்படி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் 26.26% சரிவு ஏற்பட்டுள்ளது. ரத்தினம் மற்றும் நகைகள் உற்பத்தி செய்வதற்கு தங்கம் ஒரு முக்கிய மூலப்பொருள் என்றாலும், அது மின்னணுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குறைந்த அளவில்தான் எனலாம்.
Budget: தங்கம் விலை உயரும்...?
வரி குறைப்பு செய்வதன் மூலம் உள்நாட்டில் மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் அதிகமாகும் என அரசு திட்டமிட்டது. ஏற்றுமதி பெரியளவில் உயரவில்லை. ஆனால் மாறாக இந்த வரி குறைப்பால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இறக்குமதி வரியை சற்று அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கும் முன்பு, கடினமான உண்மைகளின் அடிப்படையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை மதிப்புக் கூட்டப்பட்ட இரத்தினம் மற்றும் நகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென்றால், 2025ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தே ஆக வேண்டும். அப்படி அதிகரிக்கும்போது சந்தையில் தங்கத்தின் விலையும் உயரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ