Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? முழு கணக்கீடு இதோ

Old Tax Regime vs New Tax Regime: பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு பிறகு, உங்களுக்கு எந்த முறை சிறந்ததாக இருக்கும் என்பது உங்கள் வருமானம், வருமான ஆதாரங்கள், செலவுகள், வங்கி இருப்பு என உங்களை சார்ந்த பல காரணங்களை பொறுத்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2024, 05:18 PM IST
  • பழைய வரி முறையா?
  • புதிய வரி முறையா?
  • உங்களுக்கு ஏற்றது எது?
Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? முழு கணக்கீடு இதோ title=

Old Tax Regime vs New Tax Regime: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் ரூ.50,000 -இலிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வருமான வரி அடுக்குகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த மாற்றங்கள் நடுத்தர மக்களை பெரிதாக மகிழ்விக்கவில்லை. புதிய வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நிதியமைச்சர் சிறிது நிவாரணம் அளித்துள்ளார். ஆனால், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

பழைய வரி முறையை (Old Tax Regime) தேர்ந்தெடுத்தவர்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட சிறு நிவாரணமும் புதியவ்ரி முறைக்கே (New Tax Regime) சென்றுள்ளது. 

New Tax Regime: இதை தேர்ந்தெடுத்துள்ளவர்களுக்கு பட்ஜெட்டில் வந்துள்ள அறிவிப்புகள் என்ன?

புதிய வரி விதிப்பு முறையை கவர்ச்சிகரமானதாகவும் எளிமையாகவும் மாற்றும் வகையில் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். புதிய வரி விதிப்பின் கீழ், நிலையான விலக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பின் கீழ், 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரி அடுக்குகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரி அடுக்கில் மாற்றம் மற்றும் நிலையான விலக்கு அளவு அதிகரிப்பு காரணமாக, புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோர் (Taxpayers) ரூ.17500 வரை மிச்சப்படுத்தலாம். 

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாற்றத்திற்கு பிறகு, புதிய வரி முறைக்கான வரி அடுக்குகள்: 

- ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

- ரூ.3-7 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.

- ரூ.7-10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்

- ரூ.10-12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 15 சதவீத வரியை செலுத்த வேண்டும்.

- ரூ.12-15 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியை செலுத்த வேண்டும்.

- 15 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறுபவர்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.

பழைய வரி முறை

பழைய வருமான வரி முறை குறித்து பட்ஜெட்டில் (Budget 2024) எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த வரி விதிப்பு முறை எந்த மாற்றமும் செயப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இந்த வரி அமைப்பில், வரி செலுத்துவோர் வரிச் சேமிப்புத் திட்டங்கள், விலக்குகள், முதலீடுகள் போன்றவற்றுக்குத் தங்கள் வருவாயில் வரி விலக்கு (Tax Exemption) பெறுகின்றனர். இதில் பிரிவு 80C, பிரிவு 80D, 80G ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். முதலீடு செய்பவர்கள், பழைய வருமான வரி முறையையே சிறந்ததாகக் கருதுவதற்கு இதுவே காரணம். அதனால் அவர்கள் தங்கள் முதலீடுகளில் வரி விலக்கை கோர முடியும். 

பழைய வரி முறைக்கான வரி அடுக்குகள்: 

- 0 முதல் 2.5 லட்சம் வரை எந்த வரியும் விதிக்கப்படாது.

- ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரி விதிக்கப்படுகின்றது.

- ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படுகின்றது.

- ரூ.10 லட்சத்தை விட அதிகமான வருமாஅம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ

Old Tax Regime vs New Tax Regime: பழைய வரி முறையா? புதிய வரி முறையா? உங்களுக்கு ஏற்றது எது?

பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு பிறகு, உங்களுக்கு எந்த முறை சிறந்ததாக இருக்கும் என்பது உங்கள் வருமானம், வருமான ஆதாரங்கள், செலவுகள், வங்கி இருப்பு என உங்களை சார்ந்த பல காரணங்களை பொறுத்தது. புதிய வரி விதிப்பில் எந்த வகையிலும் விலக்கு கிடைப்பதில்லை. ஆனால், பழைய வரி முறையில், பிரிவு 80C, பிரிவு 80D, வீட்டுக் கடனுக்கான வட்டி, வீட்டு வாடகை போன்ற முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரி விலக்கு கிடைக்கும். 

- பிரிவு 80C -இல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். 

- பிரிவு 80D இல், ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பெற்றோர்கள், சுகாதாரப் பரிசோதனை, நோய் சிகிச்சை, கல்விக் கடன், NPS இல் பங்களிப்பு, மின்சார வாகனத்தின் மீதான வட்டி போன்ற பல வகைகளில் வரி விலக்கு பெறலாம். 

- பழைய வரி முறையில், வீட்டுக் கடன் வட்டி, வீட்டு வாடகை போன்ற செலவுகளுக்கு வரிவிலக்கு உண்டு.

- பணத்தை முதலீடு செய்திருந்து, வீட்டுக் கடனைப் பெற்றிருந்து, காப்பீடு செய்திருந்து, ஓய்வூதிய நிதியில் பணத்தை டெபாசிட் செய்திருந்தால், உங்களுக்கு பழைய வரி முறை சரியான வரி முறையாக இருக்கும். 

- இதில் நீங்கள் நல்ல தொகையை சேமிக்கலாம். 

- சரியாகத் திட்டமிட்டால், ஆண்டு வருமானம் ரூ.10-12 லட்சத்தில் மொத்த வரியையும் கூட சேமிக்க முடியும். 

- அதாவது, திட்டமிட்டு முதலீடு செய்பவர்களுக்கு, பழைய வரி முறை சிறந்தது.

- முதலீடுகள் செய்யாமல் வரி திட்டமிடல் ஏதும் இல்லாதவர்களுக்கு புதிய வரி விதிப்பு முறை சிறந்ததாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. எந்த வித முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுக அறிவுறுத்தப்படுகின்றது.)

மேலும் படிக்க | தபால் நிலையத்தின் தூள் திட்டம்: வட்டியிலேயே வண்டி வண்டியாய் வருமானம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News