தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கான இயக்கத்தை அகமதாபாத் பாலூட்டும் தாய்மார்கள் குழு ஆரம்பித்துள்ளது!
நாட்டில் ஒரு தனித்துவமான முயற்சியில், அகமதாபாத்தில் பாலூட்டும் தாய்மார்களின் குழு, நல்ல உடல் ஆரோக்கியம் இல்லாத அந்நியர்களின் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கான இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. உடல் நல குறைவால் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் அளிக்க இயாலமல் இருக்கும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் இந்த இயக்கம் துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டாக்டர் ருஷினா மர்பாட்டியா (29) என்ற இளம் தாய் தனது மகனுக்கு உணவளிக்க போதிய தாய்பாலை விட கூடுதலாக பால் உற்பத்தி செய்வதை உணர்ந்தபின் தாய்ப்பாலை தானம் செய்ய முடிவு செய்தார். இதன்மூலம் ICU-வில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஐந்து குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை தானம் செய்துள்ளார்.
அப்போதிருந்து, அவர் நாள் ஒன்றுக்கு 12 லிட்டர் பால் தானம் செய்துவந்துள்ளார். இது ICU-களில் உயிருக்கு போராடிய பல குழந்தைகளுக்கு உதவியது. நீண்ட நேரம் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் நம்புகிறார். மேலும், தேவைப்படும் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க உதவ முன்வருமாறு பாலூட்டும் மற்ற தாய்மார்களையும் ருஷினா கேட்டுக்கொண்டார்.
'Supermom' ருஷினாவால் ஈர்க்கப்பட்ட அமகதாபாதில் உள்ள ஒரு அமைப்பு (Arpan Newborn Care Center) இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாய்பாலுக்கான ஒரு சிறப்பு வங்கியைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி பற்றி Arpan மையத்தின் மூத்த நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் ஆஷிஷ் மேத்தா கூறுகையில், "ருஷினாவின் செயல் விலைமதிப்பற்றது. 600 கிராம் முதல் 1.5 கிலோ வரை எடையுள்ள இந்த குழந்தைகளுக்கு அவரது தாய்பால் ஒரு சஞ்சீவியாக உள்ளது.
அவரது முயற்சிகள் காரணமாக, குறைந்தது 250 பிற தாய்மார்கள் இப்போது அர்பான் வங்கியின் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். இதன்மூலம் தினம் கிட்டத்தட்ட 90 லிட்டர் தாயின் பால் நன்கொடைகளாக கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ருஷினாவின் உத்வேகத்தை எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் மேலும் பாலூட்டும் இரண்டு தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவ தாய்பால் தான முகாம்களைத் தொடங்கியுள்ளனர். நோர்வே மற்றும் பின்லாந்தில் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலை ஒரு வழக்கமான அடிப்படையில் தானம் செய்கிறார்கள் என்பதையும், இந்தியாவில் இந்த நடைமுறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.