கொரோனா வைரஸ் நோயாளிகளை காப்பாற்றுவதில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல முன்னேற்றம் காட்டியுள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களில் 4 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரம்ப முடிவுகள் நேர்மறையாகவும், ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், குணம் பெற்ற கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் நான்கு நோயாளிகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Initial trials of plasma therapy give hope... https://t.co/8ZQmeCWiPu
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 24, 2020
COVID-19 நோயாளிகளுக்கு கான்வெலசென்ட் பிளாஸ்மா சிகிச்சை ஒரு பரிசோதனை முறையாகும். இந்த சிகிச்சையில், நோயிலிருந்து மீண்ட ஒரு COVID-19 நோயாளியின் பிளாஸ்மா, ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு COVID-19 நோயாளிக்கு மாற்றப்படுகிறது. இந்த சிகிச்சையின் பின்னணியில் உள்ள யோசனை என்னவென்றால், ஆரோக்கியமான நபரிடமிருந்து நோயெதிர்ப்பு சக்தியை நோயுற்ற நோயாளிக்கு மாற்றி குணமடைய செய்வது ஆகும்.
சாகேட்டின் மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சையை வழங்கிய முதல் கொரோனா வைரஸ் நோயாளியான 49 வயதான ஆண் கொரோனாவில் இருந்து மீண்டு சிகிச்சையின் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தினார். இந்த நோயாளி இப்போது வென்டிலேட்டர் ஆதரவில் இல்லை என்று மருத்துவமனை திங்களன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நடத்த டெல்லி அரசு முடிவு செய்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் மாநிலங்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையின் மருத்துவ பாதைகளைத் தொடங்க அனுமதித்தது.
எனினும் பிளாஸ்மா சிகிச்சைக்கு, ஏற்கனவே குணமடைந்த COVID-19 நோயாளிகளிடமிருந்து பிளாஸ்மா தேவைப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற, நோயிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.