புதுடெல்லி: வட இந்தியாவின் டெல்லி, நொய்டா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு 10.33 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
சுமார் 30 விநாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த உத்தரகாண்டில் அதன் தாக்கம் அதிகம் காணப்பட்டு பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.
இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உத்ரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும், காசியாபாத்திலும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாநில அரசுகளிடம் இருந்து விரிவான அறிக்கையையும் கேட்டுள்ளார்.