நிர்பயா வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதி ஆர். பானுமதி மயங்கி விழுந்தார்!
நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தனித்தனியாக சட்ட உபாயங்களை பயன்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி, அவர்களை தனித்தனி நாள்களில் தூக்கிலிட அனுமதிகோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை விசாரித்து கொண்டிருந்த பெண் நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை பிற நீதிபதிகளும், உச்சநீதிமன்ற ஊழியர்களும் மயக்கம் தெளியச் செய்தனர். பின்னர் வீல்சேரில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பானுமதி அழைத்து செல்லப்பட்டார். நீதிபதி பானுமதி மயங்கி விழுந்ததால், மனு மீதான விசாரணை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. ஜனவரி 22 ஆம் தேதி, பிப்ரவரி 1 ஆம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.