மத்திய அரசு பழிவாங்குவதாக கூறி தர்ணா போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜியை திமுக்ஸ் எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.
இதையடுத்து கமிஷனர் வீட்டுக்கு விரைந்த மம்தா பானர்ஜி, அங்கு மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளார், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் எங்களால் என்று கூறினார்.
பின்னர், மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தர்ணாவை தொடங்கினார். இதில் கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தாவும் தனது தர்ணா போராட்டத்தை மூன்றாவது நாளாக தொடர்கிறார். மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டம் 8-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி. கனிமொழி நேற்றிவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.