19:45 23-07-2019
கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில், ஆளும் அரசுக்கு ஆதரவாக 99 ஓட்டும், எதிராக 105 ஓட்டும் (பாஜக) பதிவாகி உள்ளது. ஆறு ஓட்டு வித்தியாசத்தில் குமாரசாமி அரசு ஆட்சியை இழந்தது.
19:36 23-07-2019
சட்டசபையில் வாக்கெடுப்பை துணை சபாநாயகர் கணக்கிட்டு வருகிறார். மஜத - காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். முதலில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். தற்போது அரசுக்கு எதிரான வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
19:31 23-07-2019
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. சட்டபேரவையின் அனைத்து கதவுகள் மூடப்பட்டுள்ளன.
Voting begins in #Karnataka Assembly. pic.twitter.com/Kbe8tyqxNc
— ANI (@ANI) July 23, 2019
பெங்களூரு: இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் இருப்பதாக சபாநாயகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர், அண்மையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதை அடுத்து, கடந்த வியாழக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை குமாரசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று (ஜூலை 18) வாக்கெடுப்பு நடைபெற வில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தை ஆளுநரிடம் கொண்டுச்சென்றனர் பாஜகவினர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமி மற்றும் சபாநாயகருக்கு 2 முறை ஆளுநர் கடிதம் அனுப்பினார். ஆனாலும் திங்கட்கிழமை (ஜூலை 22) வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.
பரபரப்பான சூழலில் நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. நேற்று இரவு 11.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரவு 12 மணி என்றாலும், நாங்கள் ரெடி, இன்று இரவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கோரிக்கை வைத்துள்ளார். நாளை (ஜூலை 23) கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.
இந்தநிலையில், இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்பொழுது சபாநாயகர் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவையில் அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளுக்கு 99 எம்எல்ஏக்களே உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 103 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் வாக்கெடுப்பு நடைபெற்றால் குமாரசாமி அரசு கவிழும் சூழல் உள்ளது.