மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று 3வது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணியுடன் 116 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும், கேரளாவில் 20 தொகுதிக்கும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் 14 தொகுதிக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் 10 தொகுதிக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 தொகுதிக்கும், ஒடிசாவில் 6 தொகுதிக்கும், பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் 5 தொகுதிக்கும், அசாம் மாநிலத்தில் 4 தொகுதிக்கும், கோவாவில் 2 தொகுதிக்கும், ஜம்மு காஷ்மீர், திரிபுரா மாநிலங்களில் ஒரு தொகுதிக்கும், யூனியன் பிரதேசமான தாதர் நாகர்வேலி, டாமன் மற்றும் டையுயில் உள்ள தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில் குஜராத், கேரளா, கோவா, தாதர் நாகர்வேலி, டாமன் மற்றும் டையு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களவை தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல ஒடிசா மாநிலத்தின் 42 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மூன்றாவது கட்டத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், அசம் கான் போன்ற முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.