இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசு மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கபடவில்லை என்றால் அது பாஜக அரசு தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்!
தலைநகர் டெல்லியின் இன்று பாஜக-வின் தேசிய மாநாடு நடைப்பெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மோடி, ஆளும் பாஜக ஆட்சியில் எந்தவித ஊழல் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,. கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை ஆண்ட அரசு நாட்டை பெரும் இருளில் தள்ளியது, ஊழலும், லஞ்சமும் பெருக்கெடுத்தது என்று சொல்வதில் தவறில்லை.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற நம் அரசு ஒன்று தான் ஊழல் குற்றச்சாட்டில் சிக்காமல் உள்ளது. நம் அரசின் மீது எந்தவிதமான ஊழல் கறையும் இல்லாமல் இருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு உரிய அதிகாரம் அளித்தலுக்காக பல்வேறு முயற்சிகளை, நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துள்ளது. ஆனால், பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரிக்கின்றன. தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிய பல ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். கடந்த 60 ஆண்டுகளில் வங்கிகள் சார்பில் ரூ.18 லட்சம் கடனும், காங்கிரஸ் கட்சியின் கடைசி 6 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடியும் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விதமான கடன் மக்களுக்காகவும், மற்றொரு விதமான கடன் காங்கிரஸ் கட்சி தங்களின் விருப்பத்திற்கு உரியவருக்கு வழங்க வங்கிகளை நிர்பந்தப்படுத்தி உள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கு நமக்கு வலிமையான அரசு தேவை. ஆனால், மகா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கும் கூட்டணி வலிமையான அரசை சீண்டும் முயற்சியாகும், அது தோல்வியிலேயே முடியும். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யாருக்கும் உதவாத அரசை அமைக்க முயல்கின்றனர். வலிமையான அரசு அமையும் பட்சத்தில் தங்களது போலி முகங்கள் கிழிக்கப்படும் என்பதால், வலிமையான அரசுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அதேப்போல அயோத்தி வழக்கில் எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் தொடர்ந்து வர, காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் உயர்சாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளித்துள்ளது புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை உருவாக்கும். இந்த புதிய ஏற்பாடு ஒருபோதும் யாருடைய உரிமையையும் பறிக்காது என தெரிவித்தார்.