பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை நேற்று அதிரடியாக மாற்றி அமைத்தார். இதில் முக்கிய நிகழ்வாக சர்ச்சைக்குரிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, அதிக முக்கியத்துவம் இல்லாத ஜவுளி இலாகாவுக்கு மாற்றப்பட்டார். மாற்றத்தில் ஸ்மிரிதி இரானி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஜவுளித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:- விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிற, கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிற ஜவுளித்துறை பொறுப்பை அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். ஜவுளித்துறை, பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்காற்ற முடியும், இளைஞர்களை இந்த துறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். புதிய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு ஸ்மிரிதி இரானி தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஜவுளித்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டதும் அதிக மீடியாக்கள் அமைச்சகம் சென்றது. அப்போது ஸ்மிரிதி பேசுகையில், “நீங்கள் அனைவரும் ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு வந்து உள்ளீர்கள், இதுபோன்று அதிகளவில் ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு மீடியாக்கள் வருவது இதுவே முதல்முறையாக இருக்க சாத்தியமாக இருக்கலாம். இதனுடைய பொருள் நான் எங்கு செல்கின்றேன் என்பது எல்லாம் இல்லை, மீடியாக்கள் உடனான என்னுடைய தொடர்பு தொடரும் என்பதை காட்டுகிறது,” என்று சிரித்து கொண்டே பேசினார்.
இந்நிலையில் ஸ்மிரிதியிடம் நீங்கள் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ள உள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “பேசுவது தங்களுடைய வேலை என்று நினைக்கும் மக்கள் எதையாவது பேசதான் செய்வார்கள்,” என்று கூறிவிட்டார்.
ஸ்மிரிதி அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.