காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 10, 2019, 04:17 PM IST
காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு title=

மாஸ்கோ: காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுதல் தொடர்பான நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே இந்தியா செயல்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசினார். அப்பொழுது அவர், மோடி தலைமையிலான அரசு வரலாற்று முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். மற்றொன்று லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவித்தார். 

மத்திய அரசின் இந்த முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் இந்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியர தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுதல் தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். 

ஆனால் காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை. அந்த பிரச்னைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அந்நாடு தெரிவித்தது. 

இந்தியாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்ட உலகநாடுகள் இந்தியா பக்கம் நிற்கின்றன. நமது மற்ற அண்டை நாடுகளான இலங்கை, சீனா போன்ற நாடுகளும் அமைதி காத்து வருகின்றனர்.

இந்தநிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே இந்தியா செயல்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபைக்குப் பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதி காக்க வேண்டும் என இப்போது ரஷ்யா கேட்டுக்கொண்டது.

அதுக்குறித்து ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதாவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்பட்டது. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை மோசமாக்க சம்பந்தப்பட்ட நாடுகள் அனுமதிக்காது என நம்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தம் அடிப்படையில் தூதரக மற்றும் அரசியல் ரீதியில் தீர்க்கப்படும் என நம்புகிறோம். இரு நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News