தொடர் போராட்டங்கள் காரணமாக சபரிமலை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!
கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது. இதனையடுத்து நாளை (நவம்பர் 17) சபரிமலை செல்வுள்ளதாக தெரிவித்து திருப்தி தேசாய் இன்று கொச்சி வந்துள்ளார்.
கொச்சி வந்த திருப்பதி தேசாய் கோவிலுக்குள் அனுமதிக்கப்படகூடாது என கொச்சி விமான நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருப்பதி தேசாய் கொச்சி விமான நிலையத்தின் உள்ளே நிறுத்தப்பட்டுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாள் முதலே பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் கேரளா முழுவதும் போராட்ட களமாய் உருமாறியுள்ளது.
போராட்டங்களால் கேரளா முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவினை கேரளா காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்!