புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டி இடுவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை நவ்ஜோத் சிங் சித்து புதுடெல்லியில் நேற்று திடீரென சந்தித்துள்ளார். இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது சித்து, தனது இயக்கத்தை காங்கிரசுடன் இணைப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
2004-ம் ஆண்டு சித்து அரசியலில் பிரவேசம் ஆனார். பா.ஜனதா கட்சியில் இணைந்து அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து எம்.பி.யாக 2004 மற்றும் 2009 ஆண்டில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்து அந்த கட்சியில் இருந்து விலகினார்.
இதே போல சித்துவின் மனைவி கவூரும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து விலகினார். அவர் சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார்.
இதனிடையே, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சித்துவை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.