உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் வைத்து துணை ஆய்வாளர் ஒருவருக்கு மற்றொரு நபர் மசாஜ் செய்வது போன்ற வீடியோ வெளியானது.
இதனை அடுத்து துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் மோகன்லால்கஞ்ச் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றிய ராம் யக்ய யாதவினை மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சில் சைனி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றில் வெளியான வீடியோவில், காவல் நிலையத்திற்குள் வைத்து துணை ஆய்வாளர் ராமிற்கு ஒரு நபர் காலில் மசாஜ் செய்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், அந்நபர் புகார் அளிக்க வந்தவரா அல்லது கைதியா என்பது உறுதியாக தெரியவில்லை என போலீசார் கூறினர். இவ்விவகாரம் பற்றி விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.