India vs Bharat: இத்தனை நாள் பெருமையாக இல்லையா... சேவாக்கிற்கு தமிழ் நடிகர் பதிலடி!

India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளித்து சேவாக் பதிவிட்ட நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 5, 2023, 06:50 PM IST
  • இந்தியாவை 'பாரத்' என ஜி-20 அழைப்பிதழில் குறிப்பிட்டதால் சர்ச்சை.
  • அமிதாப் பச்சன், கங்கனா ரணாவத் போன்றோர் பெயரை மாற்ற ஆதரவு.
  • சேவாக் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் பெயரை மாற்ற கோரிக்கை.
India vs Bharat: இத்தனை நாள் பெருமையாக இல்லையா... சேவாக்கிற்கு தமிழ் நடிகர் பதிலடி! title=

India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மற்றலாமா வேண்டாமா என்ற விவாதம் இன்று திடீரென எழுந்து பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்தியா என்ற பெயரை விடுதலை இன்றி அடிமையாக இருந்த போது, ஆங்கிலேயர்களால் தரப்பட்ட பெயர் என்றும் பாரத் என்பதே இந்த நாட்டின் உண்மையான பெயர் என ஒரு தரப்பும், இந்தியா என்ற பெயரை மாற்றுவது தேவையில்லாத ஒன்று எனவும் எதிர்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு அப்படி பெயர் வைத்திருப்பதால் தான் ஆளும் பாஜக அரசு இந்த பேச்சை தொடங்கியிருப்பதாகவும் மறுபக்கம் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. 

திடீரென நாட்டின் பெயரை மாற்றும் அளவிற்கு என்ன நடந்தது என சிலருக்கு தோன்றலாம். அதாவது, டெல்லியில் வரும் செப். 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி-20 மாநாட்டின் இரவு விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசு தலைவர்  திரௌபதி முர்முவை, 'President Of India' என்பதற்கு பதிலாக 'President Of Bharat' என குறிப்பிட்டது தான் இத்தகைய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏற்கெனவே, 'ஒரு நாடு ஒரு தேர்தல்', 'சனாதன தர்மம்' ஆகியவை பொதுத் தளத்தில் பேசுபொருளாக இருக்கும் சூழில், இந்த பெயர் சர்ச்சை தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சர்ச்சைக்கு மேற்சொன்னபடி ஆதரவும், எதிர்ப்பும் அதிகமாக உள்ள நிலையில், பிரபலங்களும் இதுதொடர்பாக தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபல நடிகர் அமிதாப் பச்சன் இந்த சர்ச்சை ஏற்பட்ட சில மணிநேரங்களில் தனது ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில்,"பாரத் மாதா கி ஜே' என குறிப்பிட்டார். இது இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்களால் தெரிவிக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | இந்தியாவை பாரத் என பெயர் மாற்ற முடியுமா... அரசியலமைப்பு சொல்வது என்ன?

தொடர்ந்து, சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சந்திரமுகி - 2 நிகழ்வில் பங்கேற்ற நடிகர் கங்கனா ரணாவத்,"இந்தியா என்ற பெயர் நம்மை அடிமையாக வைத்திருந்தபோது கொடுக்கப்பட்ட பெயர். இந்தியாவை பாரத் என்று அழைக்கவேண்டும் என நான் முன்பில் இருந்தே கூறிக்கிண்டிருக்கிறேன். இந்தியா என்ற பெயரை விடுத்து பாரத் என்ற பெயரால் நாம் அழைக்கப்பட வேண்டும்" என கூறியிருந்தார். 

இதேபோல், இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பெயர் மாற்றத்தை ஆதரித்து பல்வேறு பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டார். குறிப்பாக, சில நாள்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் போட்டியை INDvsPAK என்பதற்கு பதிலாக BHAvsPAK என குறிப்பிட்டிருந்தார். அதாவது, முன்னதாகவே பாகிஸ்தான் போட்டியின் போது இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என சேவாக் அழைத்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக அவர் இன்று பதிவிட்ட ட்வீட்டில்,"ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரத நாட்டினர், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் மற்றும் நமது உண்மையான பெயரான 'பாரத்'-ஐ அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. நான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வலியுறுத்துகிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் 'பாரத்' என்ற பெயரை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.  

தொடர்ந்து மற்றொரு பதிவில்,"டீம் இந்தியா இல்லை டீம் பாரத். இந்த உலகக் கோப்பை கோலி, ரோஹித், பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு உற்சாகமூட்டும் போது, அவர்களின் ஜெர்ஸியில் பாரதம் இருக்கட்டும், வீரர்கள் "பாரத்" என்ற பெயரிடப்பட்ட ஜெர்சியை அணிந்து கொள்ள வேண்டும்" என ஜெய் ஷாவுக்கு தொடர் கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும், தற்போது கடைசியாக, "2014இல் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நம் நாட்டை பாரத் என்று அழைப்பதன் பின்னால் உள்ள அறிவியல் மற்றும்  முக்கியத்துவம் குறித்த ஒரு அற்புதமான விளக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் அளிக்கிறார். பாரத் என்று பெயர் மாற்றம் பெறும். இது பாராளுமன்றம் மூலம் நடக்கும். ஆனால் இந்த உலகக் கோப்பையில் நமது அணி "பாரத்" என்ற பெயரில் விளையாட வேண்டும்" என ஜெய்ஷாவுக்கு மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அந்த வகையில், சேவாக்கின் ஒரு ட்வீட்டை குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷால் ஒரு பதிவை பதிவேற்றியுள்ளார். அதில்,"அய்யா உரிய மரியாதையுடன்... இத்தனை வருடங்களில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா??" என கேள்வியெழுப்பினார். அதாவது, ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன் என கூறிய சேவாக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஷ்ணு விஷால் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், இது சார்ந்த விவாதம் தற்போது அனைத்து தளங்களிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | உலகக் கோப்பையில் பாரத் பெயர் கொண்ட ஜெர்ஸி... வீரேந்திர சேவாக் விடுத்த கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News