Case On Manjummel Boys Movie Producers: 2024ஆம் ஆண்டு யாருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது என யாரிடமாவது தற்போது கேள்வி கேட்டால் இரண்டு பதில்கள்தான் அதிகம் பலரிடம் இருந்தும் வரும். ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மற்றொரு பதில் மலையாள சினிமா எனலாம். ஆம், இந்தாண்டு மலையாள சினிமாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் ராசியான ஆண்டு என்றே கூறலாம்.
மலையாள திரைப்படங்கள் இந்தாண்டு கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டுள்ளன எனலாம். தமிழ்நாட்டில் இந்தாண்டு வெளியான எந்த திரைப்படமும் பெரியளவில் வசூலை குவிக்காத நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம் ஆகிய திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வசூலை குவித்து வருகின்றன.
இதில் மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ்நாட்டை பிரதானமாகவும், பிரேமலு ஹைதராபாத்தை பிரதானமாகவும், ஆவேஷம் கர்நாடகாவை பிரதானமாகவும் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் என்பதாலும் இந்த திரைப்படங்கள் இத்தகைய வெற்றியை குவித்துள்ளன. ஆவேஷம் இந்த மாதம் தொடக்கத்தில் வெளியாகி ரூ.100 கோடியும், பிரமேலும் பிப்ரவரியில் ரிலீஸாகி ரூ.100 கோடிக்கு மேலும் வசூலை குவித்தது என்றால் மஞ்சும்மல் பாய்ஸ் பிப்ரவரியின் இறுதியில் ரிலீஸாகி ரூ.200 கோடி வசூலையும் தாண்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்
மஞ்சும்மல் பாய்ஸ் மற்ற இரண்டு திரைப்படங்களை விட அதிக வசூலை குவிப்பதற்கான முக்கிய காரணம், குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்தது என்பதை கூறலாம். மற்ற இரண்டு படங்கள் இளைஞர்கள் கொண்டாடும் படமென்றால் மஞ்சும்மல் பாய்ஸ் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்த படம் எனலாம். எனவே, இந்த திரைப்படத்தின் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து பாராட்டு மழை நாற்திசைகளில் இருந்தும் வந்துகொண்டிருந்தது.
லாபத்தில் பங்கு தரவில்லை
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது கேரளாவில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் ஷான் ஆண்டனி, பாபு சாஹிர், சவுபின் ஷாகிர் ஆகிய மூன்று பேர் மீது சிராஜ் என்பவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் கடந்த 2022ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 22 கோடி ரூபாய் பட்ஜெட் எனவும் படத்திற்காக ஏழு கோடியை தான் முதலீடு செய்ததாகவும் திரைப்படத்தில் கிடைக்கக்கூடிய லாபத்தில் 40% பங்கு தருவதாகவும் ஷான் ஆண்டனி கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை ஷாம் ஆண்டனி சொன்னபடி லாப பணத்தையும் திருப்பி தரவில்லை. படத்திற்காக கொடுத்த ஏழு கோடியையும் திருப்பித் தரவில்லை. மேலும் ஓடிடி தளத்திற்கான உரிமம் கொடுத்ததில் 20 கோடி ரூபாயை அவர்களே எடுத்துக் கொண்டுள்ளனர். திரைப்படம் பல கோடிகள் லாபம் சம்பாதித்த போதும் தனக்கு உறுதி கொடுத்தபடி லாபத்தில் பங்கோ முதலீட்டு தொகையை இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல எனது பெயரையும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை" என வருத்தத்தோடு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மூவருக்குமே நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மூவரின் வங்கிக் கணக்கையும் முடக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கொச்சி மரடு காவல் நிலையத்தில்
கூட்டுச் சதி, நம்பிக்கை துரோகம், போலி தடயங்களை உருவாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பள விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ