கார்மெண்ட்ஸ் துறையில் சரவணனாக இருந்தவர் இயக்குநர் வசந்த்தின் நேருக்கு நேர் படத்தின் மூலம் சூர்யாவாக நாயகன் அவதாரம் எடுத்தார். காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அவர் மீது பெரிய கவன ஈர்ப்பு வரவில்லை. விஜய்யுடன் இணைந்து ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்க வைத்தார். செந்தூரப் பாண்டி படத்தின் மூலம் விஜயகாந்த் நடித்து விஜய்யின் கரியருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்ததுபோல் சூர்யாவுக்கும் பெரியண்ணா படத்தின் மூலம் வெளிச்சத்தைக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை எல்லாவற்றையும் விட சூர்யாவை விரும்பியும் திரும்பியும் பார்க்க வைத்த படம் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தாதான். அதற்குப் பிறகு விக்ரமன் இயக்கத்தில் உன்னை நினைத்து, அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே, மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும் சூர்யாவை இருவித வெர்ஷன்களில் மட்டுமே ரசிகர்கள் உச்சி முகர்ந்து கொண்டாடினர்.
மேலும் படிக்க | சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ
இயக்குநர் ஹரியின் ஆறு, வேல், சிங்கம் படங்களின் மூலம் தர லோக்கல் ரவுடியாகவும், பாசத்துக்குக் கட்டுப்படும் இளைஞனாகவும், ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா பார்க்கிறியா என்று சிலிர்த்தெழும் போலீஸ் சிங்கமாகவும் சூர்யா மாறியதற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். அதே சமயம் உன்கிட்ட இதைச் சொல்லியே ஆகணும் என்று ஆகச்சிறந்த காதலனாக தன்னை உருமாற்றிக் கொண்ட கௌதம் மேனன் வெர்ஷனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். வாரணம் ஆயிரம் அந்த அளவுக்கு சூர்யாவின் கரியரில் மேஜிக் நிகழ்த்தியது. இதையடுத்து கமர்ஷியல் படங்கள், காதல் படங்கள், ஆக்ஷன் படங்கள் என எல்லாவற்றிலும் சூர்யா ஒரு ரவுண்டு வந்தார். தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளுக்கும் இடம் கொடுத்தார். ஆனால், அந்தப் படங்கள் சூர்யாவுக்குப் பேர் சொல்லும்படியாக அமையவில்லை.
மார்க்கெட், வியாபாரக் கணக்குகளைத் தாண்டி தோல்விப் படம் கொடுத்த இயக்குநர்களாக இருந்தாலும் தன் திறமைக்கு மதிப்பளிக்கும் இயக்குநர்களுடன் தொடர்ந்து கை கோத்தார் சூர்யா. அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, என்ஜிகே, காப்பான், ஜெய் பீம் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உச்ச நடிகர்கள் யாரும் தோல்விப் பட இயக்குநர்களுடன் அடுத்து இணைவதில் ஆர்வம் காட்டாத நிலையிலும் அதிலும் சூர்யா தனித்துத் தெரிந்தார். சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யாவின் இன்னொரு வெர்ஷனை அதாவது 3.0 வெர்ஷனைப் பார்க்க முடிகிறது. கான்செப்ட் வகைப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அது. ஜெய் பீம் போன்ற சமூக நீதிப் படங்களில் நடித்து தன் அத்தனை சரிவையும் சரிசெய்துகொண்டார்.
அந்தப் படம் அவரை ஒரு கண்ணியமான நாயகனாக, திரைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் குறைத்த மிகச்சிறந்த ஆளுமையாகக் காட்டியது. இப்போது அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். அதன் நீட்சிதான் எதற்கும் துணிந்தவன் படம். பெண்களுக்கான பிரச்சினைகளையும், அவர்கள் மீது நடக்கும் ஒடுக்குமுறைகளையும் பதிவு செய்து அவர்களுக்காக உரக்கக் குரல் கொடுத்துள்ளதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. அந்தவிதத்தில் தன் பாதையை மாற்றிக் கொண்ட சூர்யா இனி வெற்றி மேல் வெற்றி பெறுவாரா என்பதையும், நாயக பிம்பத்துக்குத் தனி இலக்கணம் வகுப்பாரா என்பதையும் பொறுத்திருந்து தெரிந்துகொள்ளலாம். அதற்கான விடையாகத்தான் எதற்கும் துணிந்தவன் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எதற்கும் துணிந்தவன்: கிளிம்ஷா? டீசரா? ரசிகர்களின் ரியாக்ஷன்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR