விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் பெடரரை தோற்கடித்து, செர்பியாவின் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் பெடரரை சந்தித்தார்.
பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் முதல் செட்டை ஜோகோவிச் 7 - 6 என போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டை பெடரர் 6 - 1 என எளிதாக கைப்பற்றினார். மீண்டும் எழுச்சி பெற்ற ஜோகோவிச், மூன்றாவது செட்டை 7 - 6 என வசப்படுத்தினார். நான்காவது செட்டை பெடரர் 6 - 4 என தனதாக்க, போட்டியில் விறுவிறுப்பு அதிகாரித்தது.
கடைசி செட்டில் இரண்டு வீரர்களும் போராடினர், இதில் ஜோகோவிச் 13 - 12 என வென்றார். நான்கு மணி நேரம் 55 நிமிடம் நீடித்த மாரத்தான் போட்டியில், ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை தட்டி சென்றார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக (2018, 19) சாம்பியன் பட்டத்தை ஜோக்கோவிச் கைப்பற்றினார். விம்பிள்டன் தொடரில் ஐந்தாவது முறையாக பட்டத்தை வசப்படுத்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில், ஜோகோவிச் (16, ஆஸ்திரேலியா-7, பிரெஞ்ச்-1, விம்பிள்டன்-5, யு.எஸ்., ஓபன்-3) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிரண்டு இடங்களில் முறையே சுவிட்சர்லாந்தின் பெடரர் (20), ஸ்பெயினின் நடால் (18) உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் ஜூனியர் பிரிவு இறுதி போட்டியில் ஜப்பானின் ஷின்டரோ 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் கார்லோசை தோற்கடித்தார். இதன் மூலம், இப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமைஐ பெற்றார். இதற்கு முன், பெண்கள் ஜூனியர் பிரிவில் கசுகோ 1969-ல் பட்டம் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.