சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், நேற்று மோதியது. தென் ஆப்ரிக்க அணியுடனான பி பிரிவு லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துசியது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் இரு அணிகளும் களமிறங்கியது.
இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக அஷ்வின் இடம் பெற்றார். டி காக் - அம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவரில் 76 ரன் சேர்த்தது. அம்லா 35 ரன் எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் டோனியிடம் பிடிபட்டார். டிகாக் 53 ரன் (72 பந்து, 4 பவுண்டரி) எடுத்து கிளீன் போல்டானார்.
28.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்த தென் ஆப்ரிக்க அணி, கேப்டன் டி வில்லியர்ஸ் (16 ரன்) மற்றும் டேவிட் மில்லர் (1) இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட்டாகி வெளியேற திடீர் சரிவை சந்தித்தது.
டு பிளெஸ்ஸி 36 ரன் எடுத்து ஹர்திக் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுப்பு நடத்த, தென் ஆப்ரிக்க அணி 44.3 ஓவரிலேயே 191 ரன்னுக்கு சுருண்டது (3 பேர் ரன் அவுட்).
தென் ஆப்ரிக்கா 51 ரன்னுக்கு கடைசி 8 விக்கெட்டை பறிகொடுத்தது. டுமினி (20 ரன்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பூம்ரா, புவனேஷ்வர் தலா 2, அஷ்வின், ஹர்திக், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
தவான் - கேப்டன் கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 128 ரன் சேர்த்தது. தவான் 78 ரன் (83 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கோஹ்லி 76 ரன் (101 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), யுவராஜ் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பி பிரிவில் இந்தியா 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா பரிதாபமாக வெளியேறியது.