இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என சற்று முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இந்திய அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதில் 6 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. பின்னர் இது சம்பந்தமாக இந்திய கேப்டன் விராத் கோலியுடனான ஆலோசனை செய்த பிறகு புதிய பயிற்சியாளர் நியமிக்க படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு கூறியிருந்தது.
இந்நிலையில், புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இந்திய அணியின் பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.