H Raja Cases Madras High Court: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதே போல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்திதான் என்றும், ஆதாரம் ஏதும் இல்லை எனவும், பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை என்றும் ஹெச்.ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
ஹெச்.ராஜாவின் பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்றும் சுட்டிக்காட்டிய காவல் துறை, வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஹெச்.ராஜா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து, மூன்று மாதத்திற்கு விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவர், ஹெச். ராஜா. இவரின் பேச்சுகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் சர்ச்சையானதை தொடர்ந்து, அதிக ஊடக வெளிச்சத்தை பெற்றார். இவர் பாஜகவின் தேசிய செயலாளராக இருந்துள்ளார். தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலைக்கு தொடர்ந்து, ஆதரவு அளித்து வரும் அவர், அண்ணாமலை மேற்கொள்ளும் மாநிலம் முழுவதுமான நடைபயணத்திலும் பங்கேற்று வருகிறார்.
அண்ணாமலை ராமேஸ்வரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய நடைபயணம் தற்போது தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக இந்த நடைபயணத்தை திட்டமிட்டுள்ளது. மோடி அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் இந்த நடைபயணம் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முறையாக செயல்படவில்லை - உதயநிதி ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ