நீட் தேர்வு; தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு!

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Last Updated : Jul 6, 2019, 05:54 PM IST
நீட் தேர்வு; தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு! title=

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மசோதா என இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி 2017-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றதாகவும், அவற்றை 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending News