கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி - மேலும் 27 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள்

கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதால், சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 21, 2023, 10:46 AM IST
  • கும்பகோணத்தில் டெங்கு காய்ச்சல்
  • 6 பேருக்கு பரிசோதனையில் உறுதி
  • மேலும் 27 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள்
கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி - மேலும் 27 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் title=

டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர், திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் நிலையில் இப்போது கும்பகோணத்திலும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அங்கு காய்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் விழிப்பாக இருக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 27 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவந்தாலும், அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவது எப்படி?

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களிடையே பரவுகிறது. குறிப்பாக ஏடிஎஸ் கொசுக்கள் கடித்தால் டெங்கு காய்ச்சல் பரவும். அதுமட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை பெறும்போது அல்லது உறுப்பு தானம் பெற்றால் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். கர்ப்பிணிகளிடம் இருந்து கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும் பரவும். அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஒருவருக்கு நேரடியாக டெங்கு காய்ச்சல் பரவாது. 

மேலும் படிக்க | கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமா? இத தெரிஞ்சுக்கிட்டு போங்க!

டெங்கு வைரஸின் வகைகள்

தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் டெங்கு வைரஸில் 4 வேரியண்டுகள் இருக்கின்றன. அதில் டெங்கு வைரஸ் 1 (DENV 1) மற்றும் டெங்கு 2 (DENV 2) வகைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுகிறது.  டெங்கு வைரஸ் 4 (DENV 1) வகை மிகவும் அபூர்வமாகத்தான் காய்ச்சலை ஏற்படுத்தும்.

டெங்கு நோய் அறிகுறிகள்

- முதல் இரண்டு தினங்களுக்கு நோயாளிகளுக்கு உடல் சோர்வு, தலைவலி ஆகிய தொந்தரவுகள் இருக்கும். 
- சிலருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுடன் டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். அதனைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படும். 
- காய்ச்சல் தொடர்ந்து பல நாள்கள் இருக்கும். 103 டிகிரி முதல் 104 டிகிரி வரைகூட உடல் வெப்பநிலை உயரலாம். 
- நோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி ஆகிய தொந்தரவுகளும் ஏற்படும்.
- வயிற்று வலி, வயிற்றோட்டமும் ஏற்படலாம். தாங்க முடியாத உடல் வலி, மூட்டு வலி, தசை வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். தோலில் சில சிவப்பு நிறத் தடிப்புகள் (Rash) தோன்றலாம். 
- கண்ணின் பின்பகுதியில் அதிக வலி ஏற்படலாம். இவ்வாறு தோன்றும் காய்ச்சல் 2 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கும்.
- பலருக்கு மேற்கூறிய எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல்கூட இருக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆரம்பத்தில் நோய் அறிகுறி தெரியாமல்கூட இருக்கலாம். 

- டெங்கு பாதிப்புள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும்.

முன்னெச்சரிக்கை

பெரும்பாலானோருக்கு மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்துவிடும். எனவே, காய்ச்சல் முடிந்தது என்று எண்ணிவிடக் கூடாது. முதல் வாரத்தில் 4, 5, 6-வது நாள்களில் சிலருக்கு ரத்தக்கசிவு பாதிப்பு, உடலில் நீர் கோர்த்தல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, மலம் கருப்பாகப் போகும். குடல் பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவால் ரத்த வாந்தி, மூக்கில் ரத்தம் வடிதல், பல் - ஈறு பகுதிகளில் ரத்தம் கசிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். 

மேலும், ரத்தநாள நுண்ணிய தந்துகிக் குழாய்களில் பிளாஸ்மா வெளியேறுவதால் (Pleural Effusion) நுரையீரல் உறைக்கு இடையே நீர் தங்கும். வயிற்றுப் பகுதிகளில் நீர் தங்கும். எனவேதான், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நபரை குறைந்தது ஒரு வாரம் வரை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலின்போது முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருக்கும். பிறகு, 4 முதல் 6-வது நாளில் காய்ச்சல் குறையும். ஆனால், அப்போதுதான், மிக முக்கியமான ரத்தக்கசிவு, நீர் (பிளாஸ்மா) வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

எனவே, காய்ச்சல் அதிகமாக இருப்பதைவிட, அதிலிருந்து காய்ச்சல் குறையும்போதுதான் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 7-வது நாளிலிருந்து ரத்தக்கசிவு குறையலாம். பிளாஸ்மா வெளியேற்றமும் குறைந்து 7 முதல் 9 நாள்களில் நோயாளி டெங்கு பாதிப்பில் இருந்து விடுபட வாய்ப்பு ஏற்படும். ஒருவருக்குக் காய்ச்சல் தொடர்ந்து பத்து நாள்களுக்கு மேல் நீடித்துக்கொண்டே இருந்தால், அது டெங்குவாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. 

மேலும் படிக்க | TTF வாசனை கைது செய்த காவல்துறை! பிணையிலும் வர முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News